இது காதலா

.இது காதலா...... 


வானத்தில் தெரிந்த நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமை...அவளது மனம் பல கேள்விகளுக்கு விடை காண முயன்று கொண்டிருந்தது...சிறிது நாட்களாகவே அவள் எதை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ,அது நாளை நடக்கப் போகிறது என நினைக்கும் போது அவளது கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளித்துக் கொண்டிருந்தன... 

கண்ணீர் அவளை மொத்தமாய் நனைக்கத் தொடங்கிய நேரம் அவளைத் தேடி வந்தான் பிரணவ்... 

"உமை..இங்க என்ன பண்ணிட்டு இருக்காய்..தூங்கலையா...??" 

அவன் வருவதை உணர்ந்து கண்ணீரை வேகமாய் துடைத்துக் கொண்டவள் அவன் புறம் திரும்பி அவனது கேள்விக்கு பதிலளித்தாள்.. 

"தூங்கணும்..ஆனால் தூக்கம் வரல...நீ தூங்கலையா..??" 

"ம்ம்...எனக்கும் அதேதான்,தூக்கம் வருதேயில்லை.." 

அவனுக்கும் அவளைப் போல் தூக்கம் வரவில்லையென்றதும் அவள் மனம் தானாகவே பல கற்பனைக் கோட்டைகளை கட்ட ஆரம்பித்தது... 

"அவனுக்கும் எனக்கு தோன்றியது போலவே தோன்றியிருக்குமா??அவனும் என் மனநிலையில்தான் இருக்கிறானா??.."அவளுக்கு அதைப்பற்றி நினைக்க நினைக்க மனதில் சூழ்ந்திருந்த கவலைகள் அனைத்தும் ஓர் நொடியில் கரைந்து போனது...ஆனால் அவளது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை..அவளது ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் காணாமல் போகும்படியாக அவன் வேறு சொன்னான்... 

"நாளையோட கோட் நமக்கு தந்த ஒருவருஷம் முடிஞ்சு,நம்ம கேசும் நாளைக்கு கோட்டுக்கு வருது...நம்ம இரண்டு பேர் பக்கமுமே எந்த எதிர்ப்பும் இல்லாததால நாளைக்கே நமக்கு விவாகரத்து கிடைச்சிடும்னுதான் நினைக்கிறேன்...நாளைக்கு எல்லாமே நினைச்சமாதிரி முடிஞ்சாதான் நிம்மதியா தூங்க முடியும் போல...உனக்கும் அதனாலதான் தூக்கம் வரலையா உமை...??" 

பிரணவ்வின் மனம் அவள் இல்லையென்று சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டது...அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியவே அவன் அவ்வாறு சொன்னான்...அவளது பதிலிற்காக காத்திருந்த ஓர் நொடியில் அவன் மனம் பழையதை மீட்டிடச் சென்றது... 

அவர்கள் இருவருக்குமே பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம்.சொவ்ட்வெயார் இஞ்சினியராக பணி புரியும் பிரணவ்விற்கு அமெரிக்காவிற்குச் சென்று செட்டிலாக வேண்டுமென்பதே சிறுவயது முதலான கனவு...அவனுக்கு இந்த காதல்,கல்யாணத்திலெல்லாம் என்றுமே ஈடுபாடு வந்ததேயில்லை...அவன் திருமணத்தை தன்னுடைய சுதந்திரத்திற்கு இடையூறாகவே எண்ணியிருந்தான்...அதனால் வீட்டில் கல்யாணப் பேச்சை எடுத்தாலே அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தவன்...இறுதியில் அவனது பாட்டியின் சொல்லிற்கு கட்டுப்பட்டே உமையை திருமணம் செய்து கொண்டான்... 

ஆனாலும் கல்யாணம் நடந்த மறுநாளே விவாகரத்து பற்றி அவளோடு கதைத்துவிட்டான்....அவளிடமிருந்து பெரிய சண்டையை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு அவள் உடனேயே தன் சம்மதத்தை தெரிவித்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும்...அவன் நினைத்தது சுலபமாகவே முடிந்ததில் விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மறுநாளே வீட்டிற்குத் தெரியாமல் செய்யத் தொடங்கிவிட்டான்... 

அதன் பின்தான் உமையும் இந்த கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாமல்தான் சம்மதித்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியவந்தது...அவளும் அவனைப் போல்தான் திருமணத்தை தன் சுதந்திரத்திற்கு எதிரான இடையூறாகவே பார்த்தாள்...என்னதான் இருவரும் ஒருமனதாக விவாகரத்துப் பெற சம்மதித்தாலும் கோட் அவர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் அளித்திருந்தது... 

இந்த ஒருவருடமாய் இரு குடும்பத்தினருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்...விவாகரத்து கிடைத்ததும் அவன் அமெரிக்காவிற்கும்..அவள் லண்டனிற்கும் செல்வதாகவே திட்டம்...அதன் பின் சிறிதுகாலத்தின் பின் இருவர் வீடுகளிற்கும் தெரிவிக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள்... 

எந்த நாளிற்காக அவர்கள் இதுவரை காலமும் காத்திருந்தார்களோ...அது நாளை வரப்போகிறது.....விடிந்தால் அவர்கள் நினைத்தது போலவே அனைத்தும் சுபமாகவே முடிந்துவிடும்..ஆனாலும் இருவர் மனதிலும் சந்தோசத்திற்குப் பதில் கவலையே குடிகொண்டிருந்தது...இந்த ஒருவருடத்தில் எதுவுமே மாறப்போவதில்லை என நினைத்தவர்கள் இருவருமே ஒருவராக மாறிப் போயிருந்தார்கள்...எது எல்லாம் அவர்களுக்குத் தடையாக இடையூறாகத் தெரிந்ததோ அது அனைத்துமே இந்த ஒரு வருடப் பயணத்தில் ஒன்றுமேயில்லையென்று ஆகிப்போனது... 

இருவருமே நெருங்கிய நண்பர்களாய் மாறியிருந்தார்கள்...ஒருவர் அருகாமையை ஒருவர் எப்போதுமே விரும்பினார்கள்...எப்போது இருவருக்குமே ஒருவருக்கொருவர் காதல் வந்தது என்பதை அறிந்திருக்கவில்லை...ஆனாலும் ஒருவர் இன்றி ஒருவரால் இருக்க முடியாதென்பதை இருவருமே மிகத்தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள்...இருந்தும் அதை ஒருவரிடத்தில் ஒருவர் சொல்லிக் கொள்வதில் இருவருக்குமே தயக்கம் இருந்தது... 

ஆரம்பத்தில் ஒருவர் வாழ்வில் ஒருவர் தலையிடப் போவதில்லையென்று கூறிவிட்டு..இப்போது எப்படி காதலென்று சொல்வதென்று இருவருமே யோசித்து யோசித்து நாட்களைக் கடத்திக் கொண்டிருக்க அவர்களுக்காக கோட் கொடுத்திருந்த ஒருவருடமும் முடிந்து,நாளை விடிந்தால் விவாகரத்தாகிவிடும் என்பதை நினைக்கும் போது இருவருக்குமே தூக்கம் தொலைவாகிப் போயிருந்தது....அனைத்தையும் மீட்டிப் பார்த்து பெருமூச்சொன்றை வெளியிட்டவன் உமையின் பதிலில் முழித்துக் கொண்டான்... 

"எனக்கும் அதே நினைப்புத்தான் பிரணவ்..நாளைக்கு எல்லாம் நல்லபடியா முடியனும்னு...என்று மனதை மறைத்து பொய்யுரைத்தவள்,கண்ணீரை மறைக்க மறுபுறமாய் திரும்பிக் கொண்டாள்.." 

அப்போது அவளது கண்ணீரை மறைப்பதற்கு உதவி செய்யவென்றே அவளோடு இணைந்து வானமும் பெரிதாய் அழத் தொடங்கியது... 

உமையின் பதிலில் உடைந்து போன பிரணவ் அவனது கண்களிலும் எட்டிப்பார்த்த கண்ணீரை மழையில் நனைத்துக் கொண்டான்...எப்போதுமே மழையை இணைந்து ரசித்து மகிழ்பவர்கள்,இன்று தம்மை மறந்த நிலையில் மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள்...அந்த இரவு அப்படியே நீளாதா??என்றிருந்தது உமைக்கு... 

முதலில் சுயநினைவுக்கு வந்தது பிரணவ்தான்...இருவருமே நன்றாக நனைந்துவிட்டிருந்ததை உணர்ந்தவன்,அவளது கையைப் பிடித்து உள்ளே செல்வோமென்றான்...அவன் கையைப்பிடித்ததும் அவனது கையை உதறிவிட்டவள்..."நான் வரல...நீ போ..." 

"ஏய் லூசு...மழை இப்படி பெஞ்சிட்டு இருக்கு வரலனு சொல்லுற...உனக்கு எப்பவுமே மழையில நனைஞ்ச உடனேயே காய்ச்சல் வரும்...இதில இப்படியே நின்டா...விளங்கிடும்...முதல்ல உள்ள வந்து உடுப்பை மாத்திட்டு தலையை காய வைடி..." 

"எனக்கு என்ன ஆனா,உனக்கு என்னடா??கவலைப்படாத நாளைக்கு நடக்க முடியாத அளவுக்கு காய்ச்சலே வந்தாலும் கோட்டுக்கு வருவேன்...உனக்கு இப்போ அதானே முக்கியம்.." 

"என்கிட்ட அடிதான்டி வாங்கப்போறாய்...இதான் நீ என்ன புரிஞ்சுகிட்ட இலட்சணமாடி...லூசுமாதிரி பேசிகிட்டு...இப்போ உள்ள வரப்போறியா இல்லையாடி...??" 

"வரமுடியாது...போடா.." 

அவன் இனி என்ன சொன்னாலும் உள்ளே வரமாட்டாள் என்பதை உணர்ந்தவன்,அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்...ஆனால் அவளுமே விடுவதாக இல்லை...அவளது கையை விடுவிக்க அவனோடு போராடிக்கொண்டிருந்தாள்... 

"கையை விடுடா....இப்போ விடப் போறியா,இல்லையா..??" 

"விடமுடியாது.....இப்போ மட்டுமில்லை...இனி எப்பவுமே உன்னோட கையை என்னால விடமுடியாதுடி..." 

அவன் என்ன சொல்கிறான்...சிறிதுநேரத்திற்கு அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை...அவனையே அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்...அவளது பார்வையே அவன் மீதான அவளது காதலைச் சொல்லாமல் சொல்ல..உதட்டில் சிறு முறுவல் பூக்க அவளை வம்பிழுக்கத் தொடங்கினான் பிரணவ்... 

"இப்போ எதுக்குடி என்னை சைட் அடிக்கிறாய்..?" 

அவனது முறுவலே அவனைக் காட்டிக் கொடுக்க அவளும் அவனுக்கு இணையாக வம்பு செய்யத் தொடங்கினாள்.. 

"ஆமா..இவரு பெரிய மன்மதன்னு...நாங்க இவரை சைட் அடிக்கிறம்.." 

"அப்போ நீ என்னை சைட் அடிக்கலை..?" 

"பச்...ஏதும் நடக்கிறதா சொல்லுங்க சேர்...சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.." 

"சரி விடு....நம்மளை சைட் அடிக்க தான் ஒரு கும்பலே இருக்கே...அதில கூட நேற்று ஒருத்தி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா பிரணவ்னு கேட்டா...நமக்கு தான் டிவோர்ஸ் ஆகப்போகுதே...நாளைக்கு கூட ரொம்ப நல்ல நாளாம்...நாளைக்கே அவளுக்கு ஓகே சொல்லிறன்...உனக்கு ஓகேதானேடி...?" 

அவன் கேட்டு முடித்ததும்தான் தாமதம் கீழே கிடந்த தடியைத் தூக்கி அவனை அடிக்கத் தொடங்கிவிட்டாள்... 

"ஏன்டா டேய்...உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா...அவளிட்ட ஓகே சொல்லப் போறேன்னு என்கிட்டேயே சொல்லுவ நீ..." 

"ஐய்யோ....வலிக்குதடி...நான் விளையாட்டுக்குத்தான்டி அப்படிச் சொன்னேன்..." 

"விளையாட்டுக்கென்டாலும் நீ எப்படி அப்படிச் சொல்லலாம்...இன்னைக்கு நீ தொலைஞ்சடா.." 

அவளின் அடியிலிருந்து தப்பிக்க அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தவன் அவள் எதிர்பாராத வேளையில் அவளை சடாரெனத் தூக்கினான்.. 

"டேய் விடுடா என்னை...விடுடா" என்று அவனிடமிருந்து கீழே இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்...அவள் செய்த எதையும் கண்டுகொள்ளாமல் அவளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டவன்,மழைத்துளிகளில் நனைந்து கொண்டிருந்த அவள் முகத்தை ரசிக்கத் தொடங்கினான்... 

"இப்போ நீ எதுக்குடா...என்னை சைட் அடிக்கிறாய்??.." 

"நான் என் பொண்டாட்டியை சைட் அடிக்கிறேன்...உனக்கென்னடி..?" 

"நீ ஒன்னும் என்னை சைட் அடிக்க வேண்டாம் போடா...உன்னைப் பார்க்கத்தான் பெரிய கும்பலே திரியுதே அவங்கள்ள யாரையும் போய் சைட் அடிச்சுக்க போடா..."என செல்லமாக அவனோடு கோபித்துக் கொண்டாள் உமை... 

"எனக்கு அவங்க எல்லாம் வேணாம்...எனக்கு என்னோட செல்ல ராட்சசிதான் வேணும்...வாழ்க்கை முழுதும் அவ மட்டுமே போதும் எனக்கு....வேற எதுவுமே வேண்டாம்.." 

அவனது வார்த்தைகளைக் கேட்டு இப்போதும் அழுதாள்தான்...ஆனால் அது துக்கத்தில் வந்த கண்ணீர் இல்லை...கலங்கிய கண்களோடே அவனிடம் கேட்டாள்..."ஏன் இந்த செல்ல ராட்சசிதான் உனக்கு வேணும்..?" 

"ஏன்னா....ஏன்னா....நான் தூக்கினதிலேயே நீதான் கொஞ்சம் வெயிட் கம்மியா இருக்காய்...மத்தவங்க எல்லாரையும் இப்படி தூக்கி வைச்சிட்டிருக்க முடியாதுடி...அதான்.."என்று சொல்லி முடித்தவன் அவளது முகத்தில் தெரிந்த கோபத்தைக்கண்டு பெரிதாகச் சிரித்தான்... 

அவனது சிரிப்பில் இன்னும் கடுப்பாகியவள் அவனிடமிருந்து குதித்து மறுபக்கமாய் போய் நின்று கொண்டாள்....அவளது கோபத்தை வெகுவாக ரசித்தவன்...அவளை பின்னாலிருந்தே அணைத்துக்கொண்டான்..அவனது இந்த அணைப்பை எதிர்பாராத உமை அசையாமல் அப்படியே நின்றாள்....இதில் அவன் வேறு அவளது காதோரமாய் ரகசியம் பேசியதில் இதுவரை மழையில் நனைந்தும் நடுங்காத உடல் இப்போது நடுங்கத் தொடங்கியது.. 

"ஏன் எனக்கு இந்த செல்ல ராட்சசியை பிடிச்சிருக்கின்னு சொல்லட்டுமா உமை..?" 

நடுச்கிக் கொண்டிருந்த உதடுகளை அடக்கி ம்ம் என்று சொன்னாள்...அவளது படபடப்பை உணர்ந்து கொண்டவன்,அவளை அதற்கு மேலும் காக்க வைக்காமல் அவனது காதலை அவளிடம் சொன்னான்... 

"ஏன்னா எனக்கு என்னோட ராட்சசியை அவ்வளவு பிடிச்சிருக்கு...அவளை நான் நேசிக்கிற அளவுக்கு வேறு யாரையும் நான் நேசிக்க முடியாதுன்னு தோனுது...அவ இல்லைன்னா எதுவுமே இல்லைன்னு தோனுது...அவளை அவளுக்காக மட்டுமே இந்த வாழ்க்கை முழுதும் காதலிச்சுக்கிட்டே இருக்கனும்னு தோனுது....இது எல்லாத்தையும் விட அவகிட்ட மட்டுமே என் காதல் மொத்தத்தையும் கொடுத்து அவகிட்ட இருக்கிற காதல் மொத்தத்துக்கும் நான் மட்டுமே சொந்தக்காரானா இருக்கனும்னு தோனுது..."என்று கூறியவாறே அவளை அவன் புறமாய் திருப்பினான்.... 

அவன் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல அவள் அவளாகவில்லை....அவன் புறமாய் திரும்பியவள் அவன் இவ்வளவு நேரமும் வார்த்தைகளில் சொன்னதை அவள் கண்களில் காட்டிக் கொண்டிருந்தாள்....அவளது கண்களில் தெரிந்த காதலில் தன்னை மறந்தவன்..அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்...அவனுடைய அணைப்பில் அவளும் விருப்பத்தோடே இணைந்துகொண்டாள்... 

அவளை அணைத்தபடியே அவள் முடி மீது முத்தமிட்டவன்...அவளது முகத்தை நிமிர்த்தி..."என்னை கல்யாணம் பண்ணிக்கிறியாடி...?" 

அவனது கேள்வியில் லேசாக சிரித்தவள்..."எனக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டுதேடா??...வேணும்னா அவனை நாளைக்கு டிவோர்ஸ் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டுமா..??" 

"வேணாம் வேணாம் அவன் ரொம்ப நல்ல பையன்...நீ அவனை டிவோர்ஸ் பண்ணாத....நாம இரண்டுபேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்டி.." 

அவன் சொல்லிய விதத்தில் பெரிதாகச் சிரித்தவள் அவனை அணைத்தவாறே..."உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட போ உன்கிட்ட இதை நான் சொல்வேன்னு நினைக்கவே இல்லை என்றவாறே அவனது முகத்தை நேராக நோக்கியவள்..."ஐ லவ் யூ பிரணவ்..."என சொல்லியவாறு அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.... 

"ஐ லவ் யூ டூடி பொண்டாட்டி...."என்றவாறே அவன் அவளை தன்னோடு சேர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்... 

காதல்,கல்யாணம் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லாமல் திருமணம் செய்துகொண்ட இருவரும் இன்று காதல் அத்தியாயத்தில் புதுக்கவிதைகளை வரையத் தொடங்கினர்....வாழ்க்கை யாருக்கும் நினைத்தது போல் அமைந்திடுவதில்லை....நமக்கு கிடைத்த வாழ்க்கையை நமக்கு பிடித்தது போல் மாற்றிக் கொள்வது நம் கையில் தான் உண்டு....கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்....நகரும் ஒவ்வொரு நொடியும் அழகாகத் தெரியும்... 


இனி எல்லாம் வசந்தமே......

No comments:

Post a Comment

Popular Posts