பழமொழிகள் விளக்கம் - 6


1. சட்டி சுட்டதும், கை விட்டதும்.

பொருள்/Tamil Meaning:

ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்று ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.

2. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.

பொருள்/Tamil Meaning:

கரடி என்ற சொல்லின் திரிபு கெரடி. கரடி என்றால் சிலம்பம் என்று ஒரு பொருள் உண்டு. வரிசை என்றால் முறை, ஒழுங்கு, வகை என்று பொருள். சிலம்பம் கற்ற வல்லவன் ஒருவன், தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான்.

3. மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?

பொருள்/Tamil Meaning:

மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?
நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.

4. நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.

பொருள்/Tamil Meaning:

தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். அதனால் தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். அதனால் கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.
எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி.

5. தண்ணீரில் அடிபிடிக்கிறது.

பொருள்/Tamil Meaning:

தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது. 

6. இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.

பொருள்/Tamil Meaning:

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது செய்தி. 

7. ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.

பொருள்/Tamil Meaning:

சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு.

பொற்கொல்லன் தங்கத்தை உருக்கிப் பரிசோதிக்கும்போது மாசற்று இருந்தால் நகை செய்யும் அச்சில் கொட்டுவான். மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். ஏதோ ஒரு வழியில் காரியத்தை முடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

8. உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.

பொருள்/Tamil Meaning:

உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள்.

கஞசன் தரும் விருந்துக்கு இணையானது இல்லை என்று அங்கதமாகச் சொன்னது.

9. வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.

பொருள்/Tamil Meaning:

ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும்.

ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.

10. பசி வந்தால் பத்தும் பறக்கும்.

பொருள்/Tamil Meaning:

பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.










No comments:

Post a Comment

Popular Posts