கதை :முகம்

முகம் 



இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான் . அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை.....உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது .....தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.. அந்த மரமே, வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை அவனை, ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது.....ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் காட்சியை அவனால் நன்றாக உணர முடிகிறது..மூச்சு வேக வேகமாக உள்ளிழுக்கப்பட்டு, தட்டுத் தடுமாறி, உடல் நடுங்கி, வியர்த்து, தலை சுற்றுவது போல் உணர்ந்து......... 

பிடித்து தூக்கி சென்ற கை, சட்டென தன் பிடியை தளர்த்த, இலையுதிர்ந்த மரம் நோக்கி பறந்து கொண்டிருந்தவன் மைக்ரோ வினாடியில் படுக்கையில் கிடந்தான்.....வேக வேகமாய் மூச்சு வாங்கியது.... சட்டென திறந்த விழிகள் திரு திருவென வெற்றிடங்களை வரி வரியாய் ஆராய்ந்தது..... 

எது நிஜம்? ...... தூங்கியதா... பறந்ததா !.... பறக்கும் போது தூங்கியது தெரிந்ததே.......தூங்கிய போதும் பறந்தது தெரிந்ததா?....... யோசிக்க யோசிக்க சிறுநீர் கழிக்கத் தோன்றியது... மெல்ல எழுந்தான்.. உடம்பெல்லாம் ஏதோ வலி. புதிய புதிய சிந்தனைகள், அவனுக்குள் ஒரு காட்டாறை புரட்டிக் கொண்டிருந்தது..... மெல்ல எழுந்தவன் கழிவறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்... கண்ணில் ஏதேச்சையாக, அவன் அறையில் வைக்கப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடி தென்பட்டது. பார், உற்றுப் பார் என உள்ளுணர்வு சொல்வதாக ஒரு உணர்வு ஏற்பட, உற்றுப் பார்த்தான்... அவனின் முகத்தை உற்று உற்று பார்த்தான்.. பார்த்துக் கொண்டேயிருந்தான்..... 

மனிதனின் மிகப் பெரிய ஆபத்தான கண்டு பிடிப்பான, அந்த நிலைக் கண்ணாடியில் அவனின் பிம்பம் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தது..... அது வெறும் பார்வை அல்ல.. அது தேடல்... எங்கே அந்த சிறகு... அந்த இலையுதிர்ந்த மரம், கடைசியாக கை நழுவும் நேரத்தில் சொன்ன நினைவுகளை கண்ணாடிக்குள் தேடியதாக, அவனின் முக பாவனை இருந்தது..... அமைதியாக பார்த்துக் கொண்டேயிருந்தான்....... 

பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவனின் தம்பி ராமை, என்னடா, போட்டோவை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நெற்றி சுருக்கி யோசிக்க வைத்தது..... 
ராம், இங்க வா.. என்றான் அவன்..... 

ராம் வந்தான்..... 

' என்ன என்பது போல பார்த்தான்' 

அவன் போட்டோவில் இருந்து பார்வையை திருப்பாமல் போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டான்..... 

'சரியாப் போச்சு' என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு...... போடாங்.......... கொய்யால ...... அவனவனுக்கு, டெஸ்ட் சைக்கிள் டெஸ்ட், மிட் டெர்ம்னு உயிர் போற வேல எவ்ளோ இருக்கு என்று தொடர்ந்த ராம், அவன் போட்டோவப் பார்த்துட்டு அவனே யார்னு கேக்கறான் என்று முணங்கியபடியே பள்ளி செல்ல வெளியேறினான்..... 

அடுத்து அம்மா வந்தாள் ....பையனின் எப்போதும் போலானதொரு விளையாட்டு என்றே முதல் பார்வையை வீசினாள் .... 
மெதுவாக, ஆனால் அழுத்தமாக கேட்டான்..... அம்மா அந்த போட்டோல இருக்கறது யாரு? 

என்னாச்சு தேவன்... ஏன் காலையிலேயே கடுப்படிக்கற......? 

அது யாருன்னு சொல்லும்மா.. எனக்கு தெரிஞ்சாகனும்.....தேவனின் வார்த்தைகள் பற்களுக்குள் சிக்கி தடுமாறி குழப்பத்திற்கான ஆரம்பமாய் நெளிந்தது... 

அட.... லூசுப் பயலே..... அது நீ தாண்டா .. என்றபடியே சமையலறைக்குள் செல்ல முற்பட்டவளை மீண்டும் அழைத்தான்.... 

அம்மா, என்னாச்சும்மா உனக்கு? அது நானா.... நல்லா பார்த்து சொல்லும்மா.. அது நானா?????? 

தேவனின் முகம் யோசித்தபடியே தடுமாறியது...... 
இவன் விளையாடரானா இல்லை நிஜமாகவே ஏதாவது பிரச்சனையா.... என்ன இப்படி குழப்பறான்...... 
சமையலறைக்குள் செல்வதை விட்டு விட்டு தேவனின் அருகே வந்தவள்..... ' என்ன ஆச்சுடா .. உடம்பு ஏதும் சரியில்லையா'.. என்றாள் . உள்ளுக்குள் ஒரு வித பயம் பந்து உருட்டத் தொடங்கியிருந்தது..... 

ஐயோ..... அம்மா... எனக்கு ஒண்ணும் இல்ல..... இந்த போட்டோ புதுசா இருக்கே.... அது தான் யாருன்னு கேட்டேன் என்றான் இயல்பாக..... 

இல்லை..... கண்டிப்பாக தேவன் விளையாடவில்லை...... அவனின் போட்டோவைப் பார்த்து யார் என்று கேட்பது விளையாட்டு இல்லை என்பதை உள்ளம் உணர.....பாதங்களில் நடுக்கம் வரத் துவங்கியது அம்மாவுக்கு....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தேவன் விளையாடாத..... காலேஜ்க்கு நேரமாச்சு... கிளம்பு என்று சொல்லி விட்டு வேக வேகமாய் சமையலறைக்குள் சென்று, சட்டென திரும்பி ஒளிந்து நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனிக்கத் துவங்கினாள் .... 

தேவன், தன் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தான்.. இடப் பக்கமிருந்த நிலைக்கண்ணாடியிலும் தன்னைப் பார்த்தான்.....மாறி மாறிப் பார்த்தான் பின் கத்தினான்.... அம்மா இங்க வா.... அம்மா...... 
மீண்டும் அவன் கத்துவதற்குள், இது ஏதோ விபரீதம் போலதான் எனபதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டே அவனருகே வேக வேகமாய் வந்தாள் .... 
என்னடா.. ஏன் இப்படிக் கத்தற .. என்றாள் இயல்பாக இருப்பது போல....அவளின் உள்ளம் தாறுமாறாக தடுமாறிக் கொண்டிருக்க, கண்களில் அனிச்சையாக அவனின் போட்டோவும், கண்ணாடியும் விழுந்து கொண்டிருந்தது..... 

அம்மா.... புரிஞ்சுக்கோ....ஆமா நீ ஏன் இப்படி நடுங்கற... உனக்கு என்னமோ ஆயிடுச்சு.. அது என் போட்டோன்னா, கண்ணாடியில தெரியிறது யாரோட முகம்.. பாரு என்றான்......கண்ணாடியை காட்டி.... 

மெல்ல கண்ணாடிக்குள் பார்த்தாள் ... 
' என்னடா உளர்ற... கண்ணாடியிலையும் நீதாண்டா தெரியற...' விட்டால் அழுது விடுவாள் போல.... 

ம்ம்..... இது தான் சரி...... கண்ணாடிலதான் நான் தெரியறேன்... அது தான் என் முகம்....இந்த போட்டோல இருக்கறது என் முகம் இல்ல என்றான் அழுத்தமாக.... 

தேவன், அடி வாங்க போற... இந்த போட்டோவ உனக்கு நினைவில்லையா.... அதுல இருக்கறது நீயில்ல இல்ல ...... என்ன கதை விட்டுட்டு இருக்கறயா ...ம்..... கண்கள் கலங்கியபடியே அம்மா மிரட்ட.... மாறி மாறி பார்த்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்....தேவன்.... 

போட்டோல இருக்கற தன் முகத்தை யாருன்னு கேக்கரான்னா, கண்ணாடியில தெரியிற அவனுடைய முகம் வேற ஒருத்தரோட முகமாத்தான் இருக்க முடியும்.... அதாவது, தன் முகத்தையே மறந்து வேறொரு முகத்தை தன் முகமா அவனோட மனசும் மூளையும் நினைக்குது....அந்த முகம் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியுது.... இப்போதைக்கு அவன் நினைக்கற, பாக்கற முகத்தையே நாமளும் பார்க்கற மாதிரி அவன்கிட்ட காட்டிக்கணும்.. இது சயின்ஸ்ல..... 

டாக்டர், அவர் முகம் போன போக்கில் பாவனைகளோடு, தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க... 

அம்மா... மனக்கண்ணில் , காலையில் , தேவன், தன்னை,இதுதான் தான் என்று கண்ணாடியில் காட்டிய அந்த பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...அதுவும் அவன் தானே.... 

இன்னும் இன்னும் ஆழமாக ஆழமாக... உற்று உற்றுப் பார்த்தாள் ...தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள் .... 

நாட்கள் நகரத் தொடங்கியது.. 

ஒரு நள்ளிரவில் கண்ட கனவில், இலையுதிர்ந்த வான மரத்திலிருந்து ஒரு சருகு மெல்ல மெல்ல காற்றின் கைகளில் தவழ்ந்து தவழ்ந்து அவள் வயிற்றில் விழுவதாக காட்சி முடிய, வெடுக்கென மூச்சு வாங்கி எழுந்து அமர்ந்தாள் ....அவளின் கண்கள் தானாக கண்ணீரை கொட்டத் தொடங்கியது....ஆழ் மனதிலிருந்து ஒரு அழுகுரல்.... அறையெங்கும் தவழத் தொடங்கியதாக தோன்றிய ஒரு எண்ணத்தில்....... 

தேவனுக்கு முன்னால், இப்போது குழந்தை வேண்டாம் என்று கலைத்த அந்த இரண்டு மாத கருவின் உருவம் சருகாய் மிதந்தது.

No comments:

Post a Comment

Popular Posts