பழமொழிகள் விளக்கம் - 11


1. கிழவியும் காதம், குதிரையும் காதம்.

பொருள்/Tamil Meaning:

கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

ஒருவன் பூஜை வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்டு குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான்.

2. அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.

 பொருள்/Tamil Meaning:

உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிப்பது போல அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும்.


3. பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கி கொண்டு அலைய வேண்டியதாச்சு.

 பொருள்/Tamil Meaning:

ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே என்ற கவலையில் கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

4. முப்பது நாளே போ, பூவராகனே வா.

 பொருள்/Tamil Meaning:

வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம்.

வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

5. பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.

 பொருள்/Tamil Meaning:

ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு, பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு. சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான். 

வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

6. கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

 பொருள்/Tamil Meaning:

கூத்து என்றால் நடனம். கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும்.

எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான்.

7. போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.

 பொருள்/Tamil Meaning:

புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.

பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

8. கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.

 பொருள்/Tamil Meaning:

கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.
தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

9. ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.

 பொருள்/Tamil Meaning:

ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

10. இலவு காத்த கிளி போல.

 பொருள்/Tamil Meaning:

இலவம் என்றால் பருத்தி மரம். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.


No comments:

Post a Comment

Popular Posts