பழமொழிகள் விளக்கம் - 9


1. ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.

பொருள்/Tamil Meaning:

ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்!

2. தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.

பொருள்/Tamil Meaning:

தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.


3. சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி. சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி. வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.

பொருள்/Tamil Meaning:

மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். அடி வாங்கிய குடியானவன் குயவனிடம் சென்று முறையிட்டு, தன் முறையீட்டின் கடைசி வரியாக முதல் பழமொழியைக் கூறினான். குடியானவன் சொல்ல நினைத்தது, "அல்லதை அகற்றி நல்லது செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. உன் உசிதம்போல் செய்." இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன.


4. கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.

பொருள்/Tamil Meaning:

தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

5. ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.

பொருள்/Tamil Meaning:

ஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது.

உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு:
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே.
தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.

6. அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.

பொருள்/Tamil Meaning:

அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.

7. துறவிக்கு வேந்தன் துரும்பு.

பொருள்/Tamil Meaning:

துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

8. ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.

பொருள்/Tamil Meaning:

ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது.

9. எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

பொருள்/Tamil Meaning:

செட்டியானவன் (வணிகன்) பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

10. பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.

பொருள்/Tamil Meaning:

நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.


No comments:

Post a Comment

Popular Posts