பழமொழிகள் விளக்கம் - 14


1. கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.

 பொருள்/Tamil Meaning:

வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள்.

மரண துக்கத்திலும் திருடனுக்கு திருட்டுப் புத்தி போகாது என்பது செய்தி.

2. சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது

 பொருள்/Tamil Meaning:

சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. 


நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

3. பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.

 பொருள்/Tamil Meaning:

பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.

கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

4. குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.

 பொருள்/Tamil Meaning:

புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.

ஒருவனை ஏமாற்றியது மட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

5. கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.

 பொருள்/Tamil Meaning:

மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

6. எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.

 பொருள்/Tamil Meaning:

கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

7. இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.

 பொருள்/Tamil Meaning:

தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான் என்று ஆகியது. 


8. இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.

 பொருள்/Tamil Meaning:

கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

9. அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.

 பொருள்/Tamil Meaning:

ஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். வந்த இடத்தில் நாவிதனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறைசொல்லித் திருத்தியதால் மாப்பிள்ளையின் மீசை மறைந்தே போயிற்றாம்!

10. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.

 பொருள்/Tamil Meaning:

மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு. ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.






No comments:

Post a Comment

Popular Posts