பழமொழிகள் விளக்கம் - 16


1. கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்தது போலச் சொல்லவேண்டும்.

 பொருள்/Tamil Meaning:

எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.

2. குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.

 பொருள்/Tamil Meaning:

காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை.

குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான்.

குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.

3. கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?

 பொருள்/Tamil Meaning:

திருடியே உண்பவன், உணவை வாங்கி உண்பானா?

4. பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.

 பொருள்/Tamil Meaning:

பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்து வைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதை கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத் தொடர்ந்து சென்று புதையலைக் கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் குறித்து வினவியபோது பொன்னன் புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய் கூறினான்.

5. குரங்குப்புண் ஆறாது.

 பொருள்/Tamil Meaning:

புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை குறிக்கிறது.

குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.

6. சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.

 பொருள்/Tamil Meaning:

தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் (கடவுள் சம்பந்தமாக) எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்று விடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.

7. கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.

 பொருள்/Tamil Meaning:

காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.

8. ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

 பொருள்/Tamil Meaning:


கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?

9. வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.

 பொருள்/Tamil Meaning:

மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு, எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன் என்று கூறினான்.

10. குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?

 பொருள்/Tamil Meaning:

குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

No comments:

Post a Comment

Popular Posts