பழமொழிகள் விளக்கம் - 7


1. கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.

பொருள்/Tamil Meaning:

குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

2. பல்லக்குக்கு மேல் மூடியில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.

பொருள்/Tamil Meaning:

கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு என்பது பொருள்.

3. வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.

பொருள்/Tamil Meaning:


வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல.

வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது.

4. மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.

பொருள்/Tamil Meaning:

நீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. அது நீராகாரத்தைக் குறிக்கும்.

மடத்தின் பெருமை பெரியதுதான், ஆனாலும் அங்கு சோறு தண்ணீர் கிடைக்காது என்ற பொருளில் சொல்லபட்டது.

5. ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி

பொருள்/Tamil Meaning:

 குள்ளப் பண்டாரத்தின் விபூதிப்பட்டை/தாடி அவர் உயரத்தைவிட அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது!

தன் நிலைக்குத் தகாத மரியாதையைகளை எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது.

6. எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.

பொருள்/Tamil Meaning:

கச்சேரி என்ற சொல்லுக்குத் தமிழில் உத்தியோக சாலை என்று பொருள், அது எந்த உத்தியோகாமானாலும். கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். அதைப் பட்டும் பாடாமலும் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள் மனைவி.

7. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.

பொருள்/Tamil Meaning:

இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.
வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு என்ற பொருளில் சொல்லபட்டது.

8. ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?

பொருள்/Tamil Meaning:

உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.

கொடுப்பதைப் புகழ்ச்சியை எதிர்பாராமல் கொடுக்கவேண்டும் என்பது செய்தி.

9. பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.

பொருள்/Tamil Meaning:

பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.
ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.

10. துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!

பொருள்/Tamil Meaning:

குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.
எப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி.














No comments:

Post a Comment

Popular Posts