பழமொழிகள் விளக்கம் - 15


1. சேணியனுக்கு ஏன் குரங்கு?

 பொருள்/Tamil Meaning:

சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான். நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?


2. சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.

 பொருள்/Tamil Meaning:

சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல. 


 தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.


3. நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?

 பொருள்/Tamil Meaning:

கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா?

சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கருத்து.

4. ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?

 பொருள்/Tamil Meaning:

காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது என்ற பொருளில் சொல்லபட்டது.

5. மௌனம் கலகநாசம்.

 பொருள்/Tamil Meaning:

தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.


6. மாரைத்தட்டி மனதிலே வை

 பொருள்/Tamil Meaning:

இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது.


7. மது பிந்து கலகம்போல் இருக்கிறது.

 பொருள்/Tamil Meaning:

மது, பிந்து என்பவை தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.

8. குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.

 பொருள்/Tamil Meaning:

குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.

வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.

9. அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.


 பொருள்/Tamil Meaning:

அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது.

கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.

10. மரத்தாலி கட்டி அடிக்கிறது.

 பொருள்/Tamil Meaning:

முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை கட்டுவைத்துப் அடிப்பது.

No comments:

Post a Comment

Popular Posts