பழமொழிகள் விளக்கம் - 7

1. ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.

பொருள்/Tamil Meaning:

வானத்தை வில்லாக வளைப்பேன்’, ’மணலைக் கயிறாகத் திரிப்பேன்’ தற்புகழ்ச்சியின் உச்சியில் சொல்வதாக அறியப் படுகிறது.

2. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.

பொருள்/Tamil Meaning:

வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.


3. உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.

பொருள்/Tamil Meaning:

உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும். 

4. அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.

பொருள்/Tamil Meaning:

ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

வெள்ளையர் ஆட்சியில், அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். அதிகாரி மகிழ்ந்து பழமொழியின் இரண்டாவது பாதியைச் சொல்லி அதையே தான் குறித்துக்கொள்வதாகக் கூறினார். அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று.

5. பங்காளத்து நாய் சிங்காசனம் மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.

பொருள்/Tamil Meaning:

வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

தனக்கு ஆகாததைச் செய்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது செய்தி.

6. எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.

பொருள்/Tamil Meaning:

எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களைக் குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர்.

7. அப்பியாசம் கூசா வித்தை.

பொருள்/Tamil Meaning:

அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும்.

8. புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.

பொருள்/Tamil Meaning:

வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும். நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும்.

வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது என்ற பொருளில் சொல்லபட்டது.

9. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.

பொருள்/Tamil Meaning:

கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.

10. தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.

பொருள்/Tamil Meaning:

நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.










No comments:

Post a Comment

Popular Posts