பழமொழிகள் விளக்கம் - 8


1. இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.

பொருள்/Tamil Meaning:

இடைச்சன்=இரண்டாம் பிள்ளை, தலைச்சன்=முதல் பிள்ளை.

ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

2. இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?

பொருள்/Tamil Meaning:

இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல ஜீவாத்மாக்கள்.
இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

3. வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.

பொருள்/Tamil Meaning:

வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால் ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

4. கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.

பொருள்/Tamil Meaning:

ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பொருளில் சொல்லபட்டது.

5. ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

பொருள்/Tamil Meaning:

ஈர் என்பது பேனின் முட்டை. ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. அந்தப் பேனையும் பெரிதாக்கினாள்.

ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

6. ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?

பொருள்/Tamil Meaning:

கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது?

எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? 

ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.

7. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?

பொருள்/Tamil Meaning:

ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தங்கியிருக்கும் ஆண்டி கவனிக்கப்படுவானா?

8. வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.

பொருள்/Tamil Meaning:

வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.

9. அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.

பொருள்/Tamil Meaning:

அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

10. அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.

பொருள்/Tamil Meaning:

அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

 சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது.














No comments:

Post a Comment

Popular Posts