1. இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.
பொருள்/Tamil Meaning:
நாழி என்பது கால் படி அளவு.
யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.
2. ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
பொருள்/Tamil Meaning:
ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் நெற்கதிரைப்போல் இளைத்து இருக்கிறது.
3. பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.
பொருள்/Tamil Meaning:
ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். பிராமணன் சொன்ன பரிகாரம் (தங்கப் பூனை செய்து கங்கையில் விடுவது) செலவுமிக்கதாக இருந்ததால், பதிலாக வணிகன் ஒரு வெல்லப்பூனை செய்து அதற்குக் கிரியைகள் செய்துவிட்டுப் பின் அதைத் தின்றுவிட்டு பிராமணனைப் பார்த்து “பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்” என்று சொன்னானாம்.
4. சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
பொருள்/Tamil Meaning:
ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.
அதை தான், தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது என்ற பொருளில் சொல்லபட்டது.
5. பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.
பொருள்/Tamil Meaning:
திருமணத்துக்குப் பெண்தேடும் ஒருவன் நினைத்தது இது: நான் கொடுக்கும் சிறிய வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும்.
எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.
6. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
பொருள்/Tamil Meaning:
ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.
மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.
7. வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.
பொருள்/Tamil Meaning:
ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது.
கொஞ்சம் இடம் கொடுத்ததால், வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், நாட்டையே கைப்பற்றினான் என்ற பொருளில் சொல்லபட்டது.
8. நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
பொருள்/Tamil Meaning:
மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம்.
இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.என்பது செய்தி.
9. சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.
பொருள்/Tamil Meaning:
நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).
10. தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.
பொருள்/Tamil Meaning:
பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர்.
தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான் என்ற பொருளில் சொல்லபட்டது.
No comments:
Post a Comment