1. நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது).
பொருள்/Tamil Meaning:
முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்!
அதை தான் நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை என்ற பொருள் பட கூறினர்.
2. புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
பொருள்/Tamil Meaning:
இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல.
அன்பாக உதவியவர்களிகளின் உதவியில் குற்றம் கண்டுபிடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.
3. குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
பொருள்/Tamil Meaning:
குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.
4. எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
பொருள்/Tamil Meaning:
சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலைகளை எண்ணினானாம்.
தன் வேலைக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம்கொண்டு நேரத்தை விரயம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது.
5. ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
பொருள்/Tamil Meaning:
ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!
அற்ப விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது.
6. ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
பொருள்/Tamil Meaning:
வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.
மிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது.
7. இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
பொருள்/Tamil Meaning:
பூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது.
8. இது சொத்தை, அது புளியங்காய் போல்.
பொருள்/Tamil Meaning:
இது புழு அரித்துச் சொத்தையாக உள்ளது, அதுவோ புளியங்காய் போலப் புளிப்பாக உள்ளது என்று நிராகரித்தது.
எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது.
9. ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.
பொருள்/Tamil Meaning:
ரெட்டியார் என்றது தெலுங்கு தேச உழவர்களை. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். சிரத்தை இல்லாமல் சோம்பேறியாக வேலையில் இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.
10. பார்க்க கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
பொருள்/Tamil Meaning:
இந்தப் பணத்தை எண்ணிச் சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் பணத்தைத் திருப்பித்தற இயலாது என்றானாம்.
ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது.
No comments:
Post a Comment