1. சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
பொருள்/Tamil Meaning:
சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழி பிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.
2. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
பொருள்/Tamil Meaning:
உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.
அதாவுது, உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?
3. ஆனையை முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
பொருள்/Tamil Meaning:
அம்மை என்றால் அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே (அல்லது மலையை) விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?
அதை தான், “ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்? என்றார்கள்.
4. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
பொருள்/Tamil Meaning:
குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு என்பது இரண்டு மரக்கால். ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது. எனவே, சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.
5. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
பொருள்/Tamil Meaning:
பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல. இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.
6. எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
பொருள்/Tamil Meaning:
ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.
7. உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
பொருள்/Tamil Meaning:
ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?
8. உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
பொருள்/Tamil Meaning:
பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டி வாங்குவதோ வசவும் உதையும்.
9. கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
பொருள்/Tamil Meaning:
ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் (நாத்தி) கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள். என்று தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது!
10. ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
பொருள்/Tamil Meaning:
இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன. அதாவுது, நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.
No comments:
Post a Comment