பழமொழிகள் விளக்கம் - 3


1. இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.

பொருள்/Tamil Meaning:

நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான் என்று ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

2. இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

பொருள்/Tamil Meaning:

இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

அதாவுது, கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள்.

3. அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.

பொருள்/Tamil Meaning:

தன் கல்யாணத்துக்கு கூட செலவு செய்யாத கஞ்சன் ஒருவனை பார்த்து கூறுவது.

4. பட்டும் பாழ், நட்டும் சாவி.

 பொருள்/Tamil Meaning:

நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ள கதிர்களுக்குச் சாவி என்ற பெயர்.

நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று என்பது பொருள்

5. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.

பொருள்/Tamil Meaning:

ஒரு உழக்கு என்பது கால் படி.  ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

6. ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?

பொருள்/Tamil Meaning:

பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம்.

அதாவுது, சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

7. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

பொருள்/Tamil Meaning:

பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர், இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? என்று சொன்னது.

8. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

பொருள்/Tamil Meaning:

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும். அதாவுது, விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

9. கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குருதட்சணையா?

பொருள்/Tamil Meaning:

குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குருதட்சணை செய்வார்களா?

அதாவுது, தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

10. சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

பொருள்/Tamil Meaning:

வைத்திய செலவு சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் செலவு ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.




No comments:

Post a Comment

Popular Posts