அம்மா

வாழும் தெய்வம்
வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...
நாளும் உனை நினைத்து
நான் பாடும் தேசிய கீதமிது...

உன்மையான தியாகத்தின்
உருவம் என்றால் நீயம்மா...
உள்மனதிலும் ஊஞ்சல்கட்டி
உயிருள்ளவரை சுமப்பாயே...

ஆயிரம் உறவு வந்தாலும்
அகரம் என்றும் நீயம்மா...

ஆதவன் நிலவு மறைந்தாலும்
அந்த வானம் போல இருப்பாயே...

கவலை எனக்கிருந்தால்
கண்ணீர் உனக்கு வரும்...
புன்னகை எனக்கு வந்தால்
புத்துணர்ச்சி பெற்றிடுவாய்...

என் பசி தீர்ந்தால்
உன் பாதி வயிறு நிரம்பிவிடும்...
என் ருசி எதுவென்று
உன் நாக்கு மட்டும் நன்கு அறியும்...

பேரழகும் எனக்கில்லை...
பேரறிவும் எனக்கில்லை...
ஊரு கண்ணு படுமேனு
உச்சந்தலையை சுற்றுவாயே...

தன் குஞ்சு பொன் குஞ்சு
தாரக மந்திரம் என்றுரைத்து
தாய்மை எனும் சிறகினால்
தவமிருந்து காத்தாயே...

தந்தையை நான் இழந்து
தனிமரமாக தவித்த போது
தன்னம்பிக்கை நீரூற்றி
தரணியிலே வளர்த்தாயே...

கடனில் மூழ்கினாலும்
கடமையே மறக்காமல்
கல்லூரி நான் படிக்க
கரும்புகையில் வெந்தாயே...

உன் கனவுகளும் எனக்காகவே...
உன் உழைப்புகளும் எனக்காகவே...
உன் ஆசைகளும் எனக்காகவே...
உன் வேண்டுதலும் எனக்காவே...

உனக்கேதும் வேண்டுமென்று
உன்னிடமே கேட்டாலும்...
அன்பு மகன் போதுமென்று
அடுத்த நொடியில் சொன்னாயே...

வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...

No comments:

Post a Comment

Popular Posts