1) பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதா?
பொருள்/Tamil Meaning:
முதிர்ந்து பழுத்த ஓலையைப் பார்த்து இளம் ஓலை சிரிக்கிறதா?
அனுபவம் மிக்கவரைப் பார்த்து அனுபவம் இல்லாதவர் கேலி செய்து நகைப்பது.
2. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
பொருள்/Tamil Meaning:
மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.
அதாவுது அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.
3. நிறைகுடம் நீர் தளும்பாது
பொருள்/Tamil Meaning:
குடம் நிறைய நீர் இருக்கும் போது நீர் சலசலத்து வெளியே சிந்தாது.
அறிவு நிறைந்தவர்கள் சளசளவென்று நிறைய பேச மாட்டார்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டது.
4. எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
பொருள்/Tamil Meaning:
கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி. அதாவுது, திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.
5. சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
பொருள்/Tamil Meaning:
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.
6. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்/Tamil Meaning:
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி. அதாவுது, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும் கூட கவிபாடும்.
7. ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
பொருள்/Tamil Meaning:
தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும் என்பது பொருள்.
8. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்/Tamil Meaning:
ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்கதோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள் என்பது செய்தி.
9. வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்/Tamil Meaning:
வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். பலம் கட்டும் ராமன் என்று, மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது.
முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.
10. கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
பொருள்/Tamil Meaning:
ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல. இது குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.
No comments:
Post a Comment