பழமொழிகள் விளக்கம் - 4


1. காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.

பொருள்/Tamil Meaning:

நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

2. ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.

பொருள்/Tamil Meaning:

அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது என்பது பொருள்.

3. உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.

பொருள்/Tamil Meaning:

மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்று பாதிக்கப்பட்டவன் சொன்னது.

4. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?

பொருள்/Tamil Meaning:

ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து.

5. கோல் ஆட, குரங்கு ஆடும்.

பொருள்/Tamil Meaning:

எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

அதை தான் பெரியவர்கள், ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும் என்றார்கள்.

6. கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?

பொருள்/Tamil Meaning:

நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

அதாவுது, கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

7. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாது போனால் பரதேசம் போவேன்.

பொருள்/Tamil Meaning:

எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

அதாவுது, வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

8. ஒற்றைக் காலில் நிற்கிறான்.

பொருள்/Tamil Meaning:

விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

9. ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?

பொருள்/Tamil Meaning:

சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள். 

10. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?

பொருள்/Tamil Meaning:

தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?
ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.




No comments:

Post a Comment

Popular Posts