பழமொழிகள் விளக்கம் - 10

1. நனைத்து சுமக்கிறதா?

பொருள்/Tamil Meaning:

பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

2. கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.

 பொருள்/Tamil Meaning:

கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

3. ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

 பொருள்/Tamil Meaning:

தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.


4. நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.

 பொருள்/Tamil Meaning:

"சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும்.

5. குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?

 பொருள்/Tamil Meaning:

குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.
ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

6. எள்ளு என்கிறதுக்கு முன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?

 பொருள்/Tamil Meaning:

எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

7. இரிஷி பிண்டம் இராத் தாங்காது.

 பொருள்/Tamil Meaning:

ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

8. புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.

 பொருள்/Tamil Meaning:

புட்டுவெல்லம் என்பது பனைவெல்லம். அதை வைக்கும் ஓலைக்கூடைக்கு புட்டிற்கூடை என்று பெயர்; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது.முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்ற பொருள் உண்டு.

ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

9. நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.

 பொருள்/Tamil Meaning:

லவாடி என்ற சொல் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.

10. எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.

 பொருள்/Tamil Meaning:

எருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம்.

எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.











No comments:

Post a Comment

Popular Posts