முல்லா வாங்கிய கழுதை
முல்லாவின் கழுதை ஒரு தடவை காணாமல் போய் விட்டது. கழுதை இல்லாமல் அவருடைய அன்றாட வேலைகள் தடைபட்டன. அப்போது அவர் பொருளாதார நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால் காணாமல் போன கழுதைக்குப் பதிலாக வேறு ஒரு கழுதையை வாங்க அவரால் இயலவில்லை.
கழுதை போய் விட்ட கவலையால் முல்லா மிகவும் சோர்ந்து விட்டார் மிகவும் வருத்தத்துடன் வீட்டிலேயே தமதுபொழுதைக் கழிக்கலானார். செய்தியறிந்து முல்லாவின் நெருக்கமான நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து அவருக்கு ஆறுதல் கூற முற்பட்டனர்.
முல்லா, கேவலம் ஒரு கழுதை காணாமல் போய் விட்டதற்காக நீங்கள் இவ்வளவு வருத்தப்படலாமா உங்களுடைய முதல் மனைவி இறந்து போன சமயத்தில் கூட நீங்கள் இவ்வளவு மன வருத்தப்படவில்லையே என்று அவரைத் தேற்றினர்.
அருமை நண்பர்களே என் முதல் மனைவி இறந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னீர்கள். என் முதல் மனைவி இறந்த போது நீங்களெல்லாம் என்னைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு முல்லா வருத்தப்பாடதீர்கள். உங்கள் மனைவி இறந்தது தெய்வச் செயல், நடந்தது நடந்து விட்டது நாங்கள் முயற்சி செய்து உங்களுக்குத் தகுதியான ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம், என்று கூறினீர்கள். நீங்கள் தந்த வாக்குறுதிப்படி ஒரு பெண்ணையும் பார்த்து உங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைத்தீர்கள். அந்த மாதிரி கழுதை காணாமல் போனதற்கு ஆறுதல் கூற வந்த நீங்கள் கவலைப்படாதே, எங்கள் செலவில் வேறு ஒரு கழுதை வாங்கித் தந்து விடுகிறோம் என்று சொல்லவில்லையே என்று சொன்னார் முல்லா.
நண்பர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. முல்லா, நீர் பெரிய கைகாரர் கவலைப்படும் போது கூட காரியத்திலே கண்ணாக இருக்கிறீரே கவலைப்படாதீர். உங்களுக்கு ஒரு கழுதையை வாங்கிக் கொடுத்து விடுகிறோம் என்று நண்பர்கள் கூறினர். மிகவும் நன்றி என்று சிரித்த முகத்துடன் கூறினார் முல்லா.
No comments:
Post a Comment