பழமொழிகள் விளக்கம் - 26


1. அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?

 பொருள்/Tamil Meaning:

வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

தமிழ் விளக்கம்/Tamil Explanation

இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

2. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

 பொருள்/Tamil Meaning:

இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.


3. உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.

 பொருள்/Tamil Meaning:

உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

கேட்டது எல்லாம் செய்துகொடுத்தும் மேலும் ஒன்று கேட்பவனை/கேட்பவளைக் குறித்துச் சொன்னது. 

உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. கண்ணனின் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், தன் குழந்தைகளைக் கொன்ற அசுவத்தாமன் கொல்லப்படும் வரை அவள் தன் கூந்தலை முடிவதில்லை என்று. அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

4. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.

 பொருள்/Tamil Meaning:

உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

5. ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.

 பொருள்/Tamil Meaning:

ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

6. தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட வாடா!

 பொருள்/Tamil Meaning:

ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். இப்படித்தான் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து காலை விடியும்போது ஒரு முறையும் இரவு எட்டு மணிக்கும் குண்டுச் சத்தம் ஒலிக்கும். இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க.

வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா என்ற பொருளில் சொல்லபட்டது.

7. கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.

 பொருள்/Tamil Meaning:

கொட்டிக் கிழங்கு ஒரு செடி  னத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

8. நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.

 பொருள்/Tamil Meaning:

நடந்து செல்பவனுக்கு (சுறுசுறுப்பாக இருப்பவர்கள்) நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

9. குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

 பொருள்/Tamil Meaning:

குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

10. உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.

 பொருள்/Tamil Meaning:

குண்டை என்றால் எருது. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம்.

கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான். அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார் யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு என்று கடிதம் எழுதினான்.

அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு.














No comments:

Post a Comment

Popular Posts