பழமொழிகள் விளக்கம் - 24


1. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது

பொருள்/Tamil Meaning:

அவசரமாக வேலை செய்யும்போது, பெரிய அகண்ட பாத்திரத்தில் கூட கை நுழையாது.

அதாவுது அவசரத்தில் வேலை செய்தால் தெரிந்த வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்

பொருள்/Tamil Meaning:

அறையில் ஆடிப் பயிற்சி செய்தபின் தான் மேடையேறி ஆட வேண்டும்.
முறையான பயிற்சிக்கு பின் தான் எந்த ஒரு காரியத்தையும் சபையினர் முன் செய்ய வேண்டும்.

3. ஊசியைக் காந்தம் இழுக்கும்;உத்தமனைச் சினேகம் இழுக்கும்.

பொருள்/Tamil Meaning:

ஊசியைக் காந்தம் இழுப்பது போல, உத்தமனின் அன்பு கண்டு அனைவரும் அவனிடம் நட்புக் கொள்ள விரும்புவர்.

4. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

பொருள்/Tamil Meaning:

அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்பை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் அம்பை எய்திருக்க அவனை நோவாமல் அம்பைக் குறைகூறுவது ஏன்?
குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க மற்றவனைக் குறை சொல்லி, அவனை நொந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.

5. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது

பொருள்/Tamil Meaning:

பாம்பை நாம் மிதித்து விட்டால், அது நம் காலைச் சுற்றிக் கொள்ளும். உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது. நிச்சயம் அது நம்மை கடிக்காமல் விடாது.
கெட்ட மனிதர்களின் சகவாசம் நம்மை ஆபத்தில் சிக்க வைக்காமல் விடாது.

6. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

பொருள்/Tamil Meaning:

கையில் இருக்கும் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை
தெளிவாக விளங்கும் செயலுக்கு விளக்கம் தேவையில்லை.

7. கேட்டவை எல்லாம் நம்பாதே; நம்பினதெல்லாம் 
சொல்லாதே

பொருள்/Tamil Meaning:

காதால் கேட்டதை எல்லாம் நம்பக்கூடாது. நம்பியதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
தீர விசாரிக்காமல் எதையும் நம்பக்கூடாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

8. சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும்.

பொருள்/Tamil Meaning:

சொந்தமாக யோசித்துச் செயல்படாவிட்டாலும் மற்றவர்கள் சொல்வதையாவது கேட்டுச் செயல்பட வேண்டும்.

9. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

பொருள்/Tamil Meaning: 

ஒரு செயலுக்கு ஆதாரம் சரியாக இருந்தால் தான் அச்செயல் நிறைவேறும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

10. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

பொருள்/Tamil Meaning:

கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது.

என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

No comments:

Post a Comment

Popular Posts