பழமொழிகள் விளக்கம் - 18


1. அற்றது பற்றெனில் உற்றது வீடு.

 பொருள்/Tamil Meaning:

உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் உறுதிப்படும்.

2. சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.

பொருள்/Tamil Meaning:

சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது.

சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

3. குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.

 பொருள்/Tamil Meaning:

கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பைபோன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது பழமொழியின் தாத்பரியம்.

4. காரண குரு, காரிய குரு.

 பொருள்/Tamil Meaning:

காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.

5. சீதை பிறக்க இலங்கை அழிய.

 பொருள்/Tamil Meaning:

சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.

ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது.

6. தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

 பொருள்/Tamil Meaning:

ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.

பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான் இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.

7. இல்லது வாராது, உள்ளது போகாது.

 பொருள்/Tamil Meaning:

நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

8. தெய்வம் காட்டும், ஊட்டுமா?

 பொருள்/Tamil Meaning:

தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போக வேண்டும்? தெய்வமே என் கையைப் பிடித்து கூட்டிச் செல்ல வேண்டுமென்றால் எப்படி?

9. ஆசைக்கு அளவில்லை

பொருள்/Tamil Meaning:

ஆசைப்படுவதற்கு அளவு கிடையாது.
நிறைய ஆசைப்படும் போது மனிதர்களாய்ப் பிறந்த நமக்கு என்றுமே ஆசைக்கு அளவில்லை.

10. உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது

பொருள்/Tamil Meaning:

உழைக்காமல் இருந்து விட்டால் உடம்பில் தைரியம் இருக்காது.
சோம்பிக் கிடந்த மகனைப் பார்த்து உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது என்று தந்தை அறிவுரை கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts