பழமொழிகள் விளக்கம் - 17


1. அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் சமைக்கும்.

 பொருள்/Tamil Meaning:

அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.

ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.


2. கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.

 பொருள்/Tamil Meaning:

ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

3. இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.

 பொருள்/Tamil Meaning:

இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் “இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு” என்று சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.

4. உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.

 பொருள்/Tamil Meaning:

உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது.

புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது.

உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது.

உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.

5. தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.

 பொருள்/Tamil Meaning:

கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.

6. மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.

 பொருள்/Tamil Meaning:

மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

7. சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!

 பொருள்/Tamil Meaning:

எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்து சொன்னது.

8. இழவு சொன்னவன் பேரிலேயா பழி?

 பொருள்/Tamil Meaning:

மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது.

9. அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?

 பொருள்/Tamil Meaning:

மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டு வாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?

10. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

 பொருள்/Tamil Meaning:

இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.
அதுபோல, நம் மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை.

No comments:

Post a Comment

Popular Posts