வானத்தில் பறந்த தங்கப் பறவை

வானத்தில் பறந்த தங்கப் பறவை

ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?? என்று கேட்டான்.

மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள் என்றார் முல்லா.

பழமொழிகள் விளக்கம் - 26


1. அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?

 பொருள்/Tamil Meaning:

வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

தமிழ் விளக்கம்/Tamil Explanation

இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

2. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

 பொருள்/Tamil Meaning:

இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

பழமொழிகள் விளக்கம் - 25


1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

 பொருள்/Tamil Meaning:

மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினால், அது நொடியினில் கரைந்து விடும்.

தெரியாதவரை நம்பி ஒரு செயலில் இறங்க வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. விதைப்பதற்குமுன் வேலி போடு

பொருள்/Tamil Meaning:

விதைப்பதற்குமுன் வேலி போட்டால் பயிரைப் பாதுகாக்கலாம்.
முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

3. உலை வாயை மூடலாம்ஊர் வாயை மூட முடியுமா?

 பொருள்/Tamil Meaning:

உலைப் பானையை மூடி போட்டு மூடி விடலாம். ஊர் வாயை மூட முடியுமா?
ஊர்மக்கள் ஏதேனும் பேசத் தொடங்கினால் அவற்றை நிறுத்த முடியாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

4. கெண்டையைப் போட்டு வராலை இழு

பொருள்/Tamil Meaning:

சிறிய கெண்டை மீனைப் உணவாக போட்டு பெரிய வரால் மீனை இழு.
சிறியதாய் செலவழித்து பெரிய லாபம் பார்ப்பது.

5. துணை போனாலும் பிணை போகாதே

பொருள்/Tamil Meaning:

துணையாகப் போனாலும் பிணையாகப் போக கூடாது.
ஒருவரின் கடனுக்குப் பொறுப்பேற்கக் கூடாது.

6. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்/Tamil Meaning:

உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது

7. குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!

 பொருள்/Tamil Meaning:

தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும். குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

8. தொட்டில் பழக்கம்சுடுகாடு மட்டும்.

பொருள்/Tamil Meaning:

இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக் கங்களை வளர்த் துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்றார்கள். வேண்டா பழக்கத்தை ஆரம்பத்திலே வேரறுக்காவிட்டால் தீவினையாய் முடியும்!

9. களவும் கற்று மற

 பொருள்/Tamil Meaning:

நாம் சில விஷயங்கள் தவறு என்பதை அறியாமலேயே கற்கிறோம். பிறகு கற்றதில் நல்லதை மட்டும் வைத்துக் கொண்டு தீமையை முழுமையாக மறந்துவிட வேண்டும் என்பதையே இந்த பழமொழி வாயிலாக முன்னோர் நமக்கு உணர்த்துகிறார்கள்.
10. எறும்பு ஊர கல்லும் தேயும்
 
பொருள்/Tamil Meaning:

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்து கிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் சொற்பமானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்ந்து வழி உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமானதாக இருக் கும் இலக்கும் எளிமையாக கைகூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.
இளமையில் கற்று, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, உரிய காலத்தில் உரிய செயல்களைச் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்பதையே மேற்காணும் பழமொழிகள் நமக்கு கற்றுத் தருகின்றன.

பழமொழிகள் விளக்கம் - 24


1. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது

பொருள்/Tamil Meaning:

அவசரமாக வேலை செய்யும்போது, பெரிய அகண்ட பாத்திரத்தில் கூட கை நுழையாது.

அதாவுது அவசரத்தில் வேலை செய்தால் தெரிந்த வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்

பொருள்/Tamil Meaning:

அறையில் ஆடிப் பயிற்சி செய்தபின் தான் மேடையேறி ஆட வேண்டும்.
முறையான பயிற்சிக்கு பின் தான் எந்த ஒரு காரியத்தையும் சபையினர் முன் செய்ய வேண்டும்.

3. ஊசியைக் காந்தம் இழுக்கும்;உத்தமனைச் சினேகம் இழுக்கும்.

பொருள்/Tamil Meaning:

ஊசியைக் காந்தம் இழுப்பது போல, உத்தமனின் அன்பு கண்டு அனைவரும் அவனிடம் நட்புக் கொள்ள விரும்புவர்.

4. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

பொருள்/Tamil Meaning:

அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்பை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் அம்பை எய்திருக்க அவனை நோவாமல் அம்பைக் குறைகூறுவது ஏன்?
குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க மற்றவனைக் குறை சொல்லி, அவனை நொந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.

5. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது

பொருள்/Tamil Meaning:

பாம்பை நாம் மிதித்து விட்டால், அது நம் காலைச் சுற்றிக் கொள்ளும். உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது. நிச்சயம் அது நம்மை கடிக்காமல் விடாது.
கெட்ட மனிதர்களின் சகவாசம் நம்மை ஆபத்தில் சிக்க வைக்காமல் விடாது.

6. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

பொருள்/Tamil Meaning:

கையில் இருக்கும் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை
தெளிவாக விளங்கும் செயலுக்கு விளக்கம் தேவையில்லை.

7. கேட்டவை எல்லாம் நம்பாதே; நம்பினதெல்லாம் 
சொல்லாதே

பொருள்/Tamil Meaning:

காதால் கேட்டதை எல்லாம் நம்பக்கூடாது. நம்பியதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
தீர விசாரிக்காமல் எதையும் நம்பக்கூடாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

8. சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும்.

பொருள்/Tamil Meaning:

சொந்தமாக யோசித்துச் செயல்படாவிட்டாலும் மற்றவர்கள் சொல்வதையாவது கேட்டுச் செயல்பட வேண்டும்.

9. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

பொருள்/Tamil Meaning: 

ஒரு செயலுக்கு ஆதாரம் சரியாக இருந்தால் தான் அச்செயல் நிறைவேறும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

10. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

பொருள்/Tamil Meaning:

கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது.

என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

பழமொழிகள் விளக்கம் - 23



1. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா?

பொருள்/Tamil Meaning:

கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது
கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது. அதற்காக உழைக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. காலம் போகும், வார்த்தை நிற்கும்

பொருள்/Tamil Meaning:

காலம் கடந்து சென்றாலும் சொன்ன வார்த்தை நிலைக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவது.

3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

பொருள்/Tamil Meaning:

ஒற்றுமையுடன் வாழ்ந்தால் பல நன்மைகள் உண்டாகும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

4. கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்

பொருள்/Tamil Meaning:

பயன்படுத்தாத ஆயுதம் துருப் பிடித்து விடும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

5. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பொருள்/Tamil Meaning:

பூனையின் கழுத்தில் யார் மணியைக் கட்டுவது?
கடினமான செயலை யார் முதலில் செய்யத் தொடங்குவது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

6. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்

பொருள்/Tamil Meaning:

பொருளோ பணமோ கனமாக வைத்திருந்தால் போகும் வழியில் கொள்ளை போய்விடுமோ என்ற பயம் இருக்கும்.
தவறு செய்து இருந்தால் தான் மனம் பதறும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

7. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

பொருள்/Tamil Meaning:

அகலமாக உழுவதைக் காட்டிலும் ஆழமாக உழுவதே சிறந்தது.
மேம்போக்காக நிறையத் தெரிந்துக் கொள்வதை விட, ஒரு துறையை ஆழமாகத் தெரிந்து கொள்வது சிறந்தது.

8. உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது

பொருள்/Tamil Meaning:

உறவினர்களை சந்திக்காமல் இருந்தால் உறவு கெடும். அதேபோல், கொடுத்த கடனைக் கேட்காமல் இருந்தால் கிடைக்காது.

9. எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

பொருள்/Tamil Meaning:

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஒருவரின் உண்மையான குணாதிசயங்கள் யாருக்கும் தெரியாது.

10. எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?

பொருள்/Tamil Meaning:

மற்றவர்களின் வலி நமக்குத் தெரிவதில்லை என்ற பொருளில் சொல்லப்பட்டது.

வசீகரா... என் நெஞ்சினிக்க



வசீகரா... என் நெஞ்சினிக்க

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா)

பழமொழிகள் விளக்கம் - 22


1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

பொருள்/Tamil Meaning:

கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது.
அளவில் சிறியதாக இருந்தாலும் செயல்திறனில் நிறைவாக இருக்கும்.

2. தனிமரம் தோப்பாகாது

பொருள்/Tamil Meaning:

தனி மரம் தோப்பு ஆகாது.
தனி ஒருவரைக் காட்டிலும் ஒற்றுமை சிறந்தது.

3. நொறுங்கத் தின்றால் நூறு வயது

பொருள்/Tamil Meaning:

நன்றாக மென்று தின்றால் ஆரோக்கியமாக வாழலாம்.

4. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது

பொருள்/Tamil Meaning:

பாத்திரத்தில் இருந்து அள்ளாதப் பொருள் குறையாது. வாயில் இருந்து சொல்லாத சொல் பிறக்காது.

5. அற்ப அறிவு ஆபத்துக்கு இடம்

பொருள்/Tamil Meaning:

 ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும்.

6. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா

பொருள்/Tamil Meaning:

நடனம் ஆடிப் பழகிய காலும், பாட்டுப் பாடிப் பழகிய நாக்கும் சும்மா இருக்காது.
ஒரு செயல் பழக்கமாகி விட்டால் அதை செய்யாமல் இருப்பது மிகவும் கடினம்.

7. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்

பொருள்/Tamil Meaning:

துன்பத்திற்கு காரணமானவர்களே துன்பப் படுபவர்களைக் கண்டு வருந்தும் போது.

8. இன்று என்பதும் நாளை என்பதும் இல்லையென்பதற்கு அடையாளம்

பொருள்/Tamil Meaning:

இன்று, நாளை என்று காரணம் கூறினால், அது இல்லை என்று சொல்வதற்கு சமம்.
காரணம் கூறி செயலை தள்ளிப்போடும் போது.

9. ஒப்புக்குச் செய்தால் உள்ளதும் கெடும்

பொருள்/Tamil Meaning:

மனமில்லாமல் ஒரு வேலையைச் செய்தால், அது இருப்பதை விட மோசமாகவே இருக்கும்.

10. கட்டிய வீட்டுக்கு எட்டு வக்கணை

பொருள்/Tamil Meaning:

கட்டிய வீட்டைக் குறை சொல்வது.
செயலில் ஈடுபடாமல் குறை மட்டும் சொல்பவரை பார்த்து சொல்வது.

பழமொழிகள் விளக்கம் - 21


1. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?

பொருள்/Tamil Meaning:

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது.
வேண்டியதை வைத்துக்கொண்டே வெளியில் தேடும்போது.

2. சேராத இடத்தில் சேர்ந்தால் வராத துன்பம் வரும்

பொருள்/Tamil Meaning:

சேரக்கூடாத தீயவர்களுடன் சேர்ந்தால் வரக்கூடாத துன்பம் எல்லாம் வரும்.

3. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்

பொருள்/Tamil Meaning:

துன்பத்தின் வலி அவரவர்களுக்கு வரும்போது தான் புரியும் என்பதை உணர்த்தும்போது.

4. தன் முதுகு தனக்குத் தெரியாது

பொருள்/Tamil Meaning:

ஒருவர் தனக்கு பின் உள்ள முதுகைப் பார்க்க இயலாது. தன் குறை தனக்குத் தெரியாது.
சிலர் தங்கள் குறைகளை பொருட்படுத்தாமல், மாறிமாறி மற்றவர்களை குறை கூறுவார்கள்.

5. நெருப்பில்லாமல் புகையாது

பொருள்/Tamil Meaning:

உண்மை இல்லாமல் பொய் பரவ முடியாது.

6. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி

பொருள்/Tamil Meaning:

பார்ப்பதற்குச் சாதுவாக தோன்றினாலும் செயலில் புலியாக பாய்வது
பார்ப்பதற்குப் பூனையாகவும், பாய்ந்தால் புலியாகவும் இருப்பது.

7. பொன் கறுத்தாலும் மாற்று குறையுமா?

பொருள்/Tamil Meaning:

தங்கம் கறுத்துப் போனாலும் அது தரத்தில் குறையாது.
எந்த சூழ்நிலையிலும் மேன்மக்கள் குணம் மாற மாட்டார்கள்.

8. மனம் கொண்டது மாளிகை

பொருள்/Tamil Meaning:

எந்த இடமும் மாளிகை ஆகலாம், மனம் நினைத்தால்.
மனதைப் பொறுத்து தான் இருக்கும் இடம்.

9. முன் வைத்த காலை பின் வைக்காதே

பொருள்/Tamil Meaning:

முன்னால் எடுத்து வைத்த அடியைப் பின்னோக்கி வைக்க வேண்டாம்.
தொடங்கிய செயலை முன்னோக்கி நகர்த்த வேண்டும். பாதியில் கைவிடக் கூடாது.
10. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

பொருள்/Tamil Meaning:

எலியின் இருப்பிடமாக இருந்தாலும் அது தனியிடமாக இருக்கும்.
யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியாக இருப்பிடம் வேண்டும்.

Popular Posts