தவளை

தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்

முல்லாவின் புத்திசாலித்தனம்

முல்லாவின் புத்திசாலித்தனம் 

ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?? என்று கேட்டார் அவர். 

கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்கு போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் என்றார் முல்லா. 

அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம் ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். 

ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். 

முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர். இவர்கள் எல்லாம் யார் எதற்காக வந்திருக்கிறார்கள்  என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார். இதோ இவர் மருத்துவர், அதோ அந்த மனிதர் மதகுரு, அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் என்றார் முல்லா. 

நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் என்றார் முதலாளி. நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே என்று கேட்டார் முல்லா. 

ஆமாம், அப்படித்தான் சொன்னேன். அதற்கும் இதற்கு என்ன தொடர்பு  என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி. ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனை அழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன் என்றார் முல்லா. 

முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.


முல்லா கற்ற இசை

முல்லா கற்ற இசை

முல்லாவுக்கு சங்கீதம் கறறு;க் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது. சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார். ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா என முல்லா அவரிடம் கேட்டார்.

சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் என்றார் பாட்டு வாத்தியார்.
நான் என்ன கட்டணம் தரவேண்டும்? என்று முல்லா கேட்டார்.

முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் என்றார் பாட்டு வாத்தியார்.

சரி வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா. ஏன் புறப்பட்டு விட்டீர்கள் சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா என பாட்டு வாத்தியார் கேட்டார்.

ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.  

Popular Posts