மகிழ்ச்சியின் எல்லை
முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா என்று பரிதாபமாகக் கேட்டார்.
செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான்.
முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.
அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார்.
என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் முல்லா. முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான். அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் விழுந்து விட்டது. செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார். உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.
ஐயோ என் பணப்பை போய் விட்டதே என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான். முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார். செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான்.
முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார். செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.
பிறகு முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் என்றார். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று முல்லா கேட்டார்.
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா. பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம் திரும்பக் கிடைத்து விட்டதே என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா என்று கூறினான் செல்வந்தன்.
எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்று கேட்டீரல்லவா உமக்கு கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்றார் முல்லா.